சென்னை : ""தமிழகத்தை பிடித்துள்ள ஊழல், லஞ்ச பேய்களை, மக்கள் ஆதரவால் விரட்டி அடிப்போம்'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார்.
சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் பெறுவது, சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., அலுவலகத்தில் நேற்று துவங்கியது. பொது தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களுக்காக நான்கு கவுன்டர்கள், தனி தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் வசதிக்காக இரண்டு கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஏராளமான கட்சி நிர்வாகிகள், தங்கள் ஆதரவாளர்கள் புடை சூழ வந்து, விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். பொது தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய், தனித் தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களிடம் 5,000 ரூபாய் தேர்தல் நிதியாக வசூலிக்கப்பட்டது.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தனது விருப்ப மனுவை கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் வழங்கினார்.
அப்போது நிருபர்களுக்கு விஜயகாந்த் அளித்த மினி பேட்டி:வழக்கமாக 13ம் தேதியை பேய்களுக்கு உகந்த நாள் என்று கூறுவார்கள். அந்தநாளில் தேர்தலும், ஓட்டு எண்ணிக்கையும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை ஊழல் மற்றும் லஞ்ச பேய்கள் பிடித்து ஆட்டுகின்றன. இன்றைய ஆட்சியாளர்களால் தமிழனுக்கு நாடு முழுக்க அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆதரவுடன் வரும் ஏப்ரல் 13ம்தேதி, தேர்தலில் ஊழல் மற்றும் லஞ்ச பேய்களை விரட்டி அடிப்போம். ஏழை மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வழிவகைகள் செய்வோம்.இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
கட்சியின் மாநில நிர்வாகிகள் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தே.மு.தி.க., விருப்ப மனுவில் சிக்கலான கேள்விகள்!ஏப்ரல் 13ம் தேதி நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அணியில் இணைந்து தே.மு.தி.க., போட்டியிடுகிறது. இக்கூட்டணியில் தே.மு.தி.க.,விற்கு 42 சீட்கள், ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்ப மனுக்களை மார்ச் 2 முதல் 6ம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். அதன்படி, விருப்பமனு வினியோகம் நேற்று காலை 10 மணியளவில் சென்னை, கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் துவங்கியது. பொது தொகுதிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய், தனித்தொகுதிகளுக்கு 5,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு, கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட்டன. விருப்ப மனுக்களை வாங்கி, ஆர்வமுடன் பூர்த்தி செய்ய நினைத்த பலருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
அதில், விருப்ப மனு தாக்கல் செய்பவரின் பெயர், வயது, கல்வித்தகுதி, தமிழைத் தவிர சரளமாக பேசக் கூடிய மொழி குறித்த விவரங்கள், போட்டியிட விரும்பும் தொகுதி, போட்டியிட விரும்பும் தொகுதியில் சொந்த ஊர் உள்ளதா என்ற விவரம், தற்போது குடியிருக்கும் இடம் உள்ள தொகுதி, மனு கொடுப்பவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்ற விவரம், போட்டியிட விரும்பும் தொகுதியில் உள்ள ஆண் மற்றும் பெண் வாக்காளர்கள் மற்றும் மொத்த வாக்காளர்கள் விவரம் ஆகிய கேள்விகள் இடம் பெற்றிருந்தன.
மேலும், போட்டியிட விரும்புவதற்கான பிரத்யேக காரணம், வெற்றி வாய்ப்பு குறித்த விவரங்கள், கட்சி துவங்குவதற்கு முன் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருந்தவர் எனில் அது குறித்த விவரம், மன்றம் மற்றும் கட்சி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள், கட்சியில் தற்போது வகிக்கும் பொறுப்பு, தற்போது வகிக்கும் அரசுப்பணி அல்லது முன்பு வகித்த அரசுப்பணி குறித்த விவரங்களும் கேட்கப்பட்டிருந்தன. ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்ட விவரங்கள், குடும்பம் குறித்த விவரம், குடும்ப உறுப்பினர்கள் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறார்களா என்ற விவரம், அவர்கள் எந்த கட்சியில் போட்டியிட்டார்கள் என்பது குறித்த விவரம் உள்ளிட்ட கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.
எந்தவொரு அரசியல் கட்சிகளும் கேட்காத அளவிற்கு, எழுப்பப்பட்டிருக்கும் புதுமையான மற்றும் சிக்கலான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் கட்சியினர் திணறினர். பலர் மனுக்களை அங்கு பூர்த்தி செய்ய முடியாமல், வீட்டிற்கும் வாங்கிச் சென்றனர். வீட்டில் மனுவை பூர்த்தி செய்து, கோவில்களில் வைத்து பூஜை செய்த பின், வரும் 4ம்தேதி வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை என்பதால் அன்று அவற்றை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
விஜயகாந்த் உஷார்: வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, கட்சியினர் மாற்றுக் கட்சிகளிடம் விலைபோய் விடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே கடந்த சட்டசபை, உள்ளாட்சி, லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க.,விற்கு நடந்த சம்பவங்களை பாடமாகக் கொண்டே இம்முறை வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விருப்ப மனு கேள்விகளை மூன்று நாட்கள் தீவிர ஆலோசனைக்குப் பிறகே விஜயகாந்த் தயாரித்துள்ளதாக தெரிகிறது.
---------------
நல்லா இருந்தாரு இப்ப பாருங்க, பேயோட்டற மந்திரவாதி மாதிரி ஆயிட்டாரு, நான் என்ன சொல்ல வரேன்னா...அட விடுங்கப்பா.