டெல்லி: தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு மத்திய அரசுக்கு பெருத்த அவமானமாக கருதப்படுகிறது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பி.ஜே.தாமஸ். இவர் அந்த மாநில உணவுத்துறை செயலாளராக இருந்தபோது பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டது. அதில் பெரும் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உள்ளிட்டோர் மீது கடந்த 1996ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தாமஸ், ரூ. 2.8 கோடி ஊழல் செய்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், தாமஸை, மத்திய அரசு, தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்து உத்தரவிட்டது. இதை ஆரம்பத்திலேயே பாஜக கடுமையாக எதிர்த்தது. பிரதமரிடமும் இதுகுறித்து பாஜக எடுத்துக்கூறியது. இருப்பினும்அதை மீறி தாமஸை ஆணையராக அறிவித்தது மத்திய அரசு.
இதையடுத்து தாமஸ் நியமனம் சட்டவிரோதமானது, ஊழல் வழக்கில் சிக்கியவரை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஊழல் வழக்கில் சிக்கியவரை எப்படி ஊழல் கண்காணிப்பு ஆணையராக போடலாம் என்று மத்திய அரசு கடுமையாக விமர்சித்தது. இதைத் தொடர்ந்து தாமஸை பதவியிலிருந்து விலக வைக்க மத்திய அரசு கடுமையாக முயன்றது. ஆனால் அவர் பதவி விலக முடியாது என்று மறுத்து விட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பை அளித்தது உச்சநீதிமன்றம். அதில், தாமஸ் நியமனம் செல்லாது என்று கூறிய உச்சநீதி்மன்றம், அவரது நியமனம் விதிமுறைகளுக்கும், சட்டத்திற்கும் விரோதமானது என்று அறிவித்தது.
தாமஸ் நியமனம் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது மத்திய அரசுக்கு பெரும் அவமானமாக கருதப்படுகிறது.
இப்போதெல்லாம் உச்சநீதிமன்றத்தின் மணிகள் சரியாக அடிக்கின்றன.
No comments:
Post a Comment