களத்தில் குதித்தது தேர்தல் கமிஷன்: இலவச கலர் "டிவி' வழங்க தடை
சென்னை : தேர்தல் நடைமுறைகள் முடியும்வரை, இலவச கலர் "டிவி' வினியோகத்தை நிறுத்தி வைக்கவேண்டுமென, அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதவிர, இலவச வினியோகங்களை கண்காணிக்கும் பணியில் தேர்தல் கமிஷன் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது.
தமிழக அரசு, அனைத்து தரப்பினருக்கும் இலவச கலர் "டிவி'க்கள் வழங்கி வருகிறது. கடைசியாக கொள்முதல் செய்யப்பட்ட, "டிவி'க்கள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை வினியோகிக்கும் பணியில், ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் இம்மாதம் முதல் தேதியில் இருந்து தீவிரம் காட்டத் துவங்கினர். ஆனால், மார்ச் 1ம் தேதி, தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால், உடனடியாக, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. எனவே, மக்களுக்கு வினியோகிப்பதற்காக வாங்கி வைத்த, "டிவி'க்களை என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அதிகாரிகள், அவற்றை இரவோடு இரவாக வினியோகிக்கும் பணியை பல்வேறு இடங்களில் துவக்கினர்.இந்த தகவல் தேர்தல் கமிஷனுக்கும் கிடைத்தது.
இதையடுத்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்ட அறிவிப்பில், "தேர்தல் நடைமுறைகள்முடியும் வரை, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் துறைத் தலைவர்கள், இலவச கலர் "டிவி' வினியோகத்தை நிறுத்தி வைக்க வேண்டும். அதுபோன்ற வினியோகம் நடந்தது கண்டறியப்பட்டால், அதிகாரிகள் கடும் ஒழுங்கு நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என்று எச்சரித்துள்ளார்.
இதேபோல, மற்ற இலவசங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதையும் கண்காணிக்கும் பணியில் தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது. இலவசங்கள் வினியோகத்துக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவுகளை தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது.
தேர்தல் தேதியை, தலைமைத் தேர்தல் கமிஷனர் அறிவிக்கும் போது குறிப்பிடுகையில், "தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் தங்களது பணியை, பாரபட்சமின்றி, விருப்பு வெறுப்பின்றி மேற்கொள்ள வேண்டுமென தேர்தல் கமிஷன் எதிர்பார்க்கிறது. அவர்கள் தற்போது தேர்தல் கமிஷனின் பணிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கருதப்பட வேண்டும். தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடு, கண்காணிப்பு மற்றும் ஒழுக்கத்தின் கீழ், அவர்கள் கொண்டு வரப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய, அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளை தேர்தல் கமிஷன் பிறப்பித்து வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து அதிகாரிகளின் செயல்பாடுகளும், தேர்தல் கமிஷனின் கண்காணிப்புக்குள் வரும். விதிமீறி செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ஏற்கனவே, சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அதற்கு மேல் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறையினரை, சொந்த மாவட்டங்களில் இருந்து மாற்ற வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இதுதவிர, கடந்த நான்கு ஆண்டுகளில், மூன்று ஆண்டுகள் ஒரே மாவட்டத்தில் பணியாற்றிய அதிகாரிகளை வேறு மாவட்டங்களுக்கு மாற்றவும் உத்தரவிட்டிருந்தது.மேலும், இடமாற்றம் செய்யப்படும் அதிகாரிகள், விடுமுறை போன்ற காரணங்களால், கடைசியாக பணியாற்றிய இடங்களில் இருந்தால், அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றவும் உத்தரவிட்டுள்ளது. இதுதவிர, கோர்ட்டில் ஏதாவது வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்திருந்தால், அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
இந்த முறை, தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்க, மூன்று கட்ட பார்வையாளர்களை தேர்தல் கமிஷன் நியமிக்க உள்ளது. பொது பார்வையாளர்கள், தேர்தலின் ஒவ்வொரு கட்டத்தையும் உன்னிப்பாக கவனிப்பர். அவர்களது பணிகள் குறித்து, தேர்தல் கமிஷன் விரிவான அறிவுரைகளை அவர்களுக்கு அளிக்கும்.அடுத்ததாக, செலவுக் கணக்கு பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள், தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரின் செலவுகளையும் கண்காணிப்பர். குறிப்பாக, வங்கிகளில் தனியாக கணக்கு துவங்கி, வேட்பாளர்கள் செலவிடும் முறை, தமிழகத்தில் தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது.இவை தவிர, மைக்ரோ பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, ஓட்டுச்சாவடி அளவில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஓட்டுப்பதிவு துவங்கியது முதல், மின்னணு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, அவை உரிய இடத்துக்கு கொண்டு போய் சேர்க்கப்படும் வரை, இவர்கள் கண்காணிப்பர். பொதுப் பார்வையாளர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இவர்கள் செயல்படுவர்.
நன்றி: தினமலர்
No comments:
Post a Comment