Thursday, March 3, 2011

பிரமிடு சாமியார் வெங்கடேஷ்குமார் வெளியே வந்தார்

வெள்ளகோவில் : இரண்டரை ஆண்டுகளாக பிரமிடுக்குள் தியானம் செய்த முத்தூரை சேர்ந்த சாமியார் வெங்கடேஷ்குமார், சிவராத்திரி தினமான நேற்று வெளியே வந்தார்.


அவரை காண சுற்றுப்பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர்.முத்தூர், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி - கமலம். சதீஸ், வெங்கடேஷ்குமார் என்று இரு மகன்கள். எட்டு ஆண்டுக்கு முன் மும்பையில் நடந்த கார் விபத்தில் மூத்தவரான சதீஸ் இறந்து விட்டார். வெங்கடேஷ்குமார் (28) சினிமா துறையில் ஆர்வம் கொண்டு, சென்னை சென்று வாய்ப்பு தேடியுள்ளார். வாய்ப்பு கிடைக்காத நிலையில், நித்யானந்தா ஆசிரமம், வள்ளலார் ஆசிரமங்கள் சென்றுள்ளார். வள்ளலார், ஓசோ புத்தகங்களை தொடர்ந்து படித்ததால், ஆன்மிக ஈடுபாடு அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து வீடு திரும்பிய வெங்கடேஷ்குமார், இமயமலை சென்று தியானம் செய்ய இருப்பதாகவும், அதற்கு அனுமதி வழங்குமாறு தாய் தந்தையரிடம் கேட்டுள்ளார். ஒரு மகன் இறந்த லையில், மற்றொரு மகனும் தன்னைவிட்டு பிரிந்து விடக்கூடாது என்று, வீட்டின் அருகிலேயே தியானம் செய்யுமாறு கூறியுள்ளனர்.

வீட்டின் அருகிலேயே 12 அடி உயரத்தில், சுவாசத்திற்காக ஆங்காங்கே சிறு துளைகள், உள்ளேயே குளியலறையுடன், உணவு கொடுக்க சிறு திறப்புடன் பிரமிடு உருவாக்கப்பட்டது. கடந்த 2008 செப்., 3ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெங்கடேஷ்குமார் தியானம் செய்வதற்காக பிரமிடுக்குள் சென்றார்; பிரமிடு நுழைவாயில் பகுதி ஹாலோபிளாக் கற்களால் அடைக்கப்பட்டது. பிரமிடுக்குள் மாதிலிங்க மரத்தினாலான இருக்கையில் அமர்ந்து, தியானத்தை தொடர்ந்தார். காலை மற்றும் மாலை நேரங்களில் பால், மதியம் பருப்பு சாதம், உணவு வழங்க அமைக்கப்பட்ட துளை வழியாக அவரது தாயார் வழங்கி வந்தார். மற்றவர்கள் எவரிடமும் பேசாமல், தனது தாயிடம் மட்டுமே நடப்புகள் குறித்து தெரிந்து கொண்டுள்ளார். பிரமிடுக்குள் அமர்ந்து தொடர் தியானத்தில் ஈடுபட்டு வந்த அவர், இரண்டரை ஆண்டுகளான நிலையில், சிவராத்திரி தினத்தன்று தான் வெளியே வர இருப்பதாக அவரது தாயாரிடம் கூறினார். பிரமிடு சாமியார் வெளிவருகிறார் என்ற செய்தி ஊர் முழுவதும் பரவியது. சாமியாரை பார்க்க அதிகளவில் மக்கள் வருவர் என்பதை கருத்தில் கொண்டு, கூட்டத்தை கட்டுப்படுத்த கம்புகளால் தட்டி அமைக்கப்பட்டது. பிரமிடு அருகிலேயே பூஜை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

சிவராத்திரி தினமான நேற்று பிரமிடு சாமியாரை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் வெள்ளகோவில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை 5.00 மணியளவில், சாமியார் வெளிவருவதற்காக நுழைவாயில் பகுதி இடிக்கப்பட்டது. மாலை 5.15 மணியளவில் சாமியார், பிரமிடு விட்டு வெளியே வந்தார். அவரை பார்த்த பக்தர்கள், பக்தி பரவசத்தில் வணங்கினர். அவர் வீட்டுக்குள் சென்று தனது அண்ணன் உருவப்படத்தை வணங்கி விட்டு, பூஜை செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்தார். 5.30 மணி முதல் சிவ பூஜை செய்யப்பட்டது. பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். அன்னதானமும் வழங்கப்பட்டது.பிரமிடு சாமியார் நிருபர்களிடம் கூறியதாவது: புலன்களை அடக்கி சத்தியத்தை அடைவதற்காக, நான் தேர்ந்தெடுத்தது பிரமிடு தியானம். பிரமிடு என்பது காஸ்மிக் சக்திகளை கிரகித்து கொடுப்பதாக உள்ளது. வெளிசூழ்நிலைகளில் தியானம் செய்வதைவிட, பிரமிடு தியானம் மிகச் சிறந்தது. அதற்காக, அனைவரும் பிரமிடு தியானம் செய்ய வேண்டும் என்று இல்லை. அவரவருக்கு பிடித்த பாதையில் சென்று, சத்தியத்தை அடையலாம். என்னை நித்யானந்தா சீடர் என்றும் பிரமிடு சாமியார் என்றும் கூறுகின்றனர். நித்யானந்தா ஆசிரமத்தில் இரண்டு மாதங்கள் இருந்தேன். அவரது கொள்கைகள் பிடிக்காமல், வெளியே வந்து, வள்ளலார் ஆசிரமத்தில் சேர்ந்தேன். வள்ளலார், ஓசோ, விவேகானந்தர் கொள்ளைகள், எனது ஆன்மிக பாதைக்கு வழிகாட்டுதலாக உள்ளன. பிறர் என்னை எப்படி அழைத்தாலும், நான் வைத்துக்கொண்ட பெயர் ஸ்ரீசத்ய சம்பூர்ண வெங்கடேஷ சுவாமிகள் என்பது. பிரமிடில் கதவுகள் பொருத்தப்பட்டு, தொடர்ந்து தியானத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். வேறெந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இவ்வாறு, பிரமிடு சாமியார் கூறினார்.

நன்றி: தினமலர்

No comments: