Tuesday, March 15, 2011

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சி அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு

சென்னை: வரும் தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சி ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.சென்னை எழும்பூரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தின் முடிவில் இக்கட்சியின் அகில இந்திய தலைவர் எஸ்.எம்.பாக்கர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட வக்ப் நிலங்கள் மீட்கப்பட்டு, ஏழை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும். பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும். ஜமாஅத் மூலம் செய்யப்படும் திருமண பதிவு, சட்டப் பதிவு போல ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற ஜெயலலிதா உத்தரவாதம் அளித்துள்ளார். இக்கோரிக்கைகளின் அடிப்படையில் அ.தி.மு.க.,வுக்கு எங்கள் கட்சி ஆதரவளிக்கும். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், மாநிலத்தில் தி.மு.க.,வும் எங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டன.இதனால், தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அவர்களை எதிர்த்து பிரசாரம் செய்வோம். முஸ்லிம் வேட்பாளர்கள் எந்த அணியை சேர்ந்தவர்கள் என பார்த்து, அவர்கள் எதிரணி வேட்பாளராக இருந்தால் அவர்களை தோற்கடிக்கவும் பிரசாரம் செய்வோம்.நாங்கள் தனி மேடை அமைத்து அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம். அ.தி.மு.க., தனியாக மேடை அமைத்து கொடுத்தால், நாங்கள் அதிலும் தேர்தல் பிரசாரம் செய்வோம். எங்கள் மேடையில் வேட்பாளருக்கு மட்டுமே இடம் இருக்கும்.இவ்வாறு பாக்கர் கூறினார்.

No comments: