Thursday, March 3, 2011

ஜெ - விஜயகாந்த் இன்று சந்திப்பு? தொகுதிப் பங்கீடு நிறைவு?

சென்னை: அதிமுக, தேமுதிக இடையே நடந்து வந்த தொகுதிப் பங்கீட்டுப் பேரம் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த்தும் இன்று சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களுடனும், தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி. வேறு யாருடனும் கூட்டணி கிடையாது என்று முழங்கி வந்தவர் விஜயகாந்த். மேலும் தனது கூட்டம் ஒவ்வொன்றிலும், யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று தொண்டர்களிடம் கேட்டும் வந்தவர் அவர். ஆனால் தற்போது விஜயகாந்த்தும், கூட்டணி அரசியலில் குதித்து விட்டார்.

தற்போதைய சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிடுகிறது தேமுதிக. இதற்காக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இரு கட்சிகளுக்கும் இடையே முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையும் நடந்து முடிந்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து விஜயகாந்த்துக்குச் சொந்தமான கேப்டன் டிவி அன்று வெளியிட்ட செய்தியில், அதிமுக தலைமை விரும்பி அழைத்ததால் தேமுதிக குழுவினர் பேசப் போனதாக திரும்பத் திரும்பக் கூறியது. மேலும், தேமுதிக பேச்சுவார்த்தைக்கு வந்ததால் அதிமுகவும், அதன் தொண்டர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறியது. இதனால் தேமுதிகவினருக்கு இந்த உடன்பாட்டில் உடன்பாடு இல்லையோ என்று எண்ணும் வகையில் இருந்தது கேப்டன் டிவி செய்தி.

இந்த நிலையில், தேமுதிகவுக்கான தொகுதிப் பங்கீட்டு நடைமுறைகளை அதிமுக முடித்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து இன்று ஜெயலலிதாவும், விஜயகாந்த்தும் சந்தித்துப் பேசி உடன்பாட்டில் கையெழுத்திடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடன்பாட்டில் கையெழுத்திட விஜயகாந்த் போயஸ் கார்டனுக்குப் போவாரா அல்லது அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு போவாரா என்பது தெரியவில்லை.

தேமுதிகவுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்தவுடன், ரொம்ப காலமாக அதிமுகவுடனேயே இருந்து வரும் மதிமுகவுக்கும், தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் இடதுசாரி கட்சிகளுக்கும், பிறருக்கும் ஜெயலலிதா தொகுதிகளை ஒதுக்குவார் என்று தெரிகிறது.

நடிகர் கார்த்திக்குக்கும் சில தொகுதிகள் அல்லது ஒரு தொகுதி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று ஜெயலலிதா, விஜயகாந்த் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருப்பதற்கு, இன்று நிறைந்த அமாவாசை நாள் என்பதால்தான். ஜெயலலிதாவும் சரி, விஜயகாந்த்தும் சரி ஜோசியத்தின் மீது அபார நம்பிக்கை உள்ளவர்கள். எனவே இன்று சந்தித்துப் பேசி உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: