Monday, March 7, 2011

யாருக்கும், யாரும் அடிமை இல்லை - விஜயகாந்த்

சென்னை: ஆண்களும், பெண்களும் சரி சமமானவர்கள். யாருக்கும், யாரும் அடிமை இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அவர் விடுத்துள்ள அறிக்கை:

வாழ்வில் சரிபாதி அங்கமாக பெண்கள் திகழ்கிறார்கள். பெண்கள் சிறந்த பகுதியினராக வருணிக்கப்படுகிறார்கள். தாயாகவும், தாரமாகவும், அக்காள் - தங்கையாகவும் இருந்து தொண்டுக்கும், தியாகத்திற்கும் இலக்கணமாக இருந்து தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்ளுகிறார்கள். மனித இனம் தொடர்வதற்குத் தாய்மார்களே காரணம். அவர்களின் நலனை பேணுகிற வகையில் கொண்டாடப்படுவதே இன்றைய உலக மகளிர் தினம்.

ஆண்களுக்கும் பெண்கள் அடிமை இல்லை. பெண்களுக்கும் ஆண்கள் அடிமை இல்லை. இருபாலாரும் ஒரு சேர நண்பர்கள் போல இருக்க வேண்டும் என்பதே திருவள்ளுவர் காட்டும் வழியாகும். ஆண், பெண் உறவு நட்பின் அடிப்படையில் அமைகிறபோது, வாழ்க்கையில் எதிர்க்கொள்ளும் சவால்களை அவர்கள் ஒரு சேர சமாளிக்கின்றனர். கைகோர்த்துக் கொண்டு பணியாற்றுவதினாலேயே திருமணங்களில் கூட, கைகோர்த்துக் கொண்டு சுற்றிவரச் சொல்கிறோம்.

இந்த உயரிய மரபுக்கேற்ப அரசியலிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கான சூழ்நிலையை சமுதாய ஆர்வலர்கள் உருவாக்க வேண்டும். கல்வி, வேலை, மருத்துவ வசதி போன்றவற்றில் பெண்கள் இன்னும் சமநிலை அடையவில்லை. சமஅந்தஸ்து, சமவாய்ப்பு, சமநீதி பெண்களுக்கும் கிடைக்கும் வகையில் அதிக அக்கறை செலுத்த இந்த மகளிர் தினம் பயன்படட்டும் என்று கூறி இந்த தினத்தில் மகளிர் அனைத்து நலமும், வளமும் பெற்று வாழ, தே.மு.தி.க. சார்பில் இதயமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments: