Thursday, March 3, 2011

கார் விலை உயரும் அபாயம்

டெல்லி: கார்களுக்கான பாகங்களை இறக்குமதி செய்வதற்கான வரிவிதிப்பு முறையில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளதால் வெளிநாட்டு நிறுவனங்களின் சொகுசு கார்களின் விலை ரூ.8லட்சம் வரை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகில் வேகமாக வளரும் இரண்டாவது கார் சந்தை என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதனால், பல முன்னணி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கார் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் கார் விற்பனை செய்து வரும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் முக்கிய பாகங்களை இறக்குமதி செய்து, பின்னர் அசெம்பிள் செய்து விற்பனை செய்து வருகின்றன.

இதுபோன்று, எஞ்சின் உள்ளிட்ட முக்கிய பாகங்களை இறக்குமதி செய்து பின்னர் அசெம்பிள் செய்வதற்கு சிகேடி யூனிட் என்று அழைக்கப்படுகிறது. கார் பாகங்களை சிகேடி யூனிட் பிரிவில் இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு இறக்குமதி சுங்க வரியில் சலுகை அளித்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கார் மற்றும் பைக்கை அசெம்பிள் செய்வதற்கு தேவைப்படும் முக்கிய பாகங்களான எஞ்சின்,கியர் பாக்ஸ், சேசிஸ் ஆகியவற்றை சிகேடி யூனிட் பாகங்களாக கருத முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கார் மற்றும் பைக்கை இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் இனி வரிச்சலுகை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வெளிநாட்டு நிறுவனங்களில் குறிப்பிட்ட சொகுசு கார்கள் மற்றும் பைக்குகளின் விலை கடுமையாக உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பிஎம்டபிள்யூ,ஆடி,மெர்சிடிஸ் பென்ஸ்,டொயோட்டோ மற்றும் ஃபோர்டு நிறுவனங்களின் குறிப்பிட்ட சொகுசு கார்களின் விலை ரூ.8 லட்சம் வரை உயரும் என கூறப்படுகிறது.

மத்திய அரசின் இந்த புதிய வரிவிதிப்பு முறையால், சொகுசு கார்களின் விற்பனை வெகுவாக பாதிக்கப்படும் என்பதால், பல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் கவலையடைந்துள்ளன. இந்த புதிய வரிவிதிப்பு முறையை அமல்படுத்துவதை மறுபரிசீலனை செய்யவும் மத்திய அரசுக்கு அந்த நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

புதிய வரிவிதிப்பு முறையை மத்திய அரசு கைவிடாவிட்டால், இந்தியாவில் எதிர்கால முதலீடுகள் குறித்து பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

----------

எல்லாம் சரிங்க முதலில் கேஸ், பெட்ரோல் போன்ற அடிப்படை விஷயங்களை விலை ஏத்தாம சரி.

No comments: