அ.தி.மு.க.,விற்கு தாவ தயாராகவுள்ள, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும்
கட்சி நிர்வாகிகளை தக்க வைப்பது குறித்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்
நேற்று ரகசிய ஆலோசனை நடத்தினார்.
தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் நான்கு
பேர், கடந்த மாதம், முதல்வர் ஜெயலலிதாவை, தலைமை செயலகத்தில் சந்தித்து
பேசி, பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த சந்திப்பிற்கு பிறகு, தே.மு.தி.க.,
நடவடிக்கைகளில் பங்கேற்காமல், அவர்கள் நால்வரும் ஒதுங்கியுள்ளனர்.முதல்வரை
சந்தித்த எம்.எல்.ஏ.,க்களை, தே.மு.தி.க., நிர்வாகிகள், கடுமையாக விமர்சனம்
செய்து வருகின்றனர். அவர்களுக்கு போட்டியாக, தே.மு.தி.க., தலைவர்
விஜயகாந்தை, நான்கு எம்.எல்.ஏ.,க்களும் விமர்சித்து வருகின்றனர்.இம்மாத
இறுதியில் நடக்க உள்ள, சட்டசபை வைர விழாவிற்குள், தே.மு.தி.க.,
எம்.எல்.ஏ.,க்கள் சிலர், முதல்வரை சந்திக்ககூடும் என்று தகவல் கசிந்து
வருகிறது. அதேபோல, கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் சிலரும், கட்சி
தாவலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை, 11:30
மணியளவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள
கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.அதற்கு முன்பாகவே, சுதீஷ்,
சந்திரக்குமார், பார்த்தசாரதி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் அங்கு
வந்திருந்தனர். அவர்களுடன் விஜயகாந்த் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
அதேநேரத்தில், கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து,
விஜயகாந்துடன், மாநில நிர்வாகிகள் விவாதித்துள்ளனர்.
அதிருப்தியில் உள்ளவர்களிடம் பேசி, சமரசம் செய்யுமாறு, மாநில நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது.அ.தி.மு.க.,வில் லோக்சபா தேர்தல் தொடர்பான, ஆலோசனை கூட்டம், மாவட்ட வாரியாக நடந்து முடிந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில், ஆலோசனை நடந்து வருகிறது. தி.மு.க.,வும் டெசோ, இளைஞர் அணி மாநாடு என்று பரபரப்பாக இயங்கி வருகிறது.இதனால், அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பரபரப்பாக உள்ளனர். ஆனால், தே.மு.தி.க., நிர்வாகிகள், தொண்டர்கள் எந்தவித அரசியல் செயல்பாடும் இன்றி, சோர்வடைந்து வருவதாக, மாநில நிர்வாகிகள் விஜயகாந்திடம் கூறியுள்ளனர்.இதையடுத்து கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில், லோக்சபா தேர்தல் குழுவை நியமிப்பது, மகளிர் அல்லது இளைஞர் அணி மாநாடு நடத்தலாமா என்பது குறித்து விஜயகாந்த், அவர்களுடன் விவாதித்துள்ளார்.
[இதில் மாற வேண்டியது யார், மாற்ற வேண்டியவைகள் என்னென்ன என்பது நம் அனைவருக்குமே தெரியுமே]
No comments:
Post a Comment