"இருட்டறையில்
உள்ளதடா உலகம், சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே'' என்று நெஞ்சம்
கொதித்து எழுதினார் பாரதிதாசன். சாதி அடையாளத்தை சொல்லிக் கொள்வதும் சாதிப்
பெயர் கேட்பதும் ஒரு அவமானம் என்ற ஒரு காலம், ஒரு தலைமுறை தமிழகத்தில்
இருந்தது.
பெரியார் தன் வாழ்நாள் முழுக்க முன்வைத்துப் போராடிய சாதி
மறுப்புத் திருமணங்கள் ஒரு கலாச்சார இயக்கமாக நிகழ்ந்ததும் இதே
தமிழகத்தில்தான். கலப்பு மணத்தை சுய மரியாதை திருமணம் என்று மிகப்பெரிய
மனித கௌரவமாகக் கொண்டாடிய வரலாறுகளும் இங்குதான் நடந்தன.
ஆனால்
இப்போது இந்த வரலாறு பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்கிறது.. சாதி கடந்த
திருமணங்களுக்கு எதிரான வன்செயல்கள் தமிழகம் முழுக்க பரவலாக நடப்பதாக
தொடர்ந்து சமீபகாலமாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. கௌரவக் கொலைகள்
அதிக அளவில் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் மாறிவிட்டது என்ற
தகவல்களும், சில சாதி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலப்புத் திருமணத்திற்கு
எதிராக முன் வைத்த முழக்கங்களும் நாம் சாதிக்கொடுமையின் சாப நிழலுக்குள்
வந்துகொண்டிருக்கிறோம் என்பதை திரும்பத் திரும்ப எச்சரித்துக்கொண்டே
இருந்தன.
அதன் உச்சக்கட்ட வெளிப்பாடுதான் கடந்த வாரம் தர்மபுரி
மாவட்டத்தில் நடந்த சாதிக்கலவரம். தென் தமிழகத்தில் நடந்த சாதிக்கலவரத்தின்
அதிர்ச்சியிலிருந்து தமிழகம் மீள்வதற்குள் வட தமிழகத்தில் சாதி வெறியின்
நெருப்பு மூட்டப்பட்டுள்ளது.
தர்மபுரி அருகேயுள்ள செல்லன் கொட்டாய்
கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு இளைஞர் மற்றொரு சாதியைச்
சேர்ந்த பெண்ணை மணந்துகொண்டதில் பிரச்சினை ஆரம்பமானது. இரு வரையும் பிரிக்க
பல முயற்சிகள் செய்யப்பட்டன. அது நடக்க வில்லை. பெண்னின் தந்தை தற்கொலை
செய்துகொண்டார். அதைத் தொடர்ந்த வன்முறையில் பெரும் நெருப்பு மூண்டது.
நத்தம்
காலனி, கொண்டம்பட்டி, அண்ணாநகர் ஆகிய கிராமங்களில் நடத்தப்பட்ட
தாக்குதல்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் 268 வீடுகள்
சூறையாடி தீ வைத்து எரிக் கப்பட்டன. 3.50 கோடி மதிப்புள்ள பொருள்கள்
நாசமடைந்தன. 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 500 பேர் மீது வன் கொடுமை
தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலப்புத்
திருமணங்களுக்கு எதிராக இன்று பல சாதிகளிலிருந்தும் பகிரங்கமாகப் பேசத்
தொடங்கிவிட்டார்கள். பா.ம.க. நடத்திய சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர்
திருவிழாவில் காடுவெட்டி குரு "வன்னியகுலப் பெண்களைக் கலப்புமணம்
செய்பவர்களை வெட்ட வேண்டும். ""யாராவது நம்ம பொண்ணுங்களுக்கு வேற சாதியில்
திருமணம் செய்து வைத்தால் தொலைத்துவிடுவேன்'' என்று பேசியது தமிழகத்தையே
அதிரவைத்தது.
அ.தி.மு.க. பேச்சாளர் பழ.கருப்பையா "ஆச்சி
வந்தாச்சு''என்ற இதழில் இப்படி எழுதுகிறார்: ""நகரத்தாருக்குரிய
அடையாளங்கள் இன்றளவும் தொடர்கின்றன. இவை என்றும் தொடர வேண்டுமென்றால், நாம்
கலப்புத் திருமணத்தை முற்றிலுமாக எதிர்க்க வேண்டும். சமூகத்தை மீறிக்
கலப்புத் திருமணம் செய்து கொள்வோரை, நம் சமூகத்திலிருந்து தள்ளி வைக்க
வேண்டும்.'''
கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி கொங்கு வேளாள கவுண்டர்
பேரவையினர் "கலப்புத் திருமண எதிர்ப்பு பிரச்சார இயக்கத்தினைத் தொடங்கி
வைத்து மாநாடு நடத்தினர். அதன் மாநிலத் தலைவர் பொங்கலூர் ஆர்.மணிகண்டன்
‘"டெக்கான் க்ரானிகல்'' இதழுக்கு அளித்த பேட்டியில் "கலப்புத்
திருமணங்களால் எங்கள் சாதிய மரபுகள் அழிவதை நாங்கள் விரும்பவில்லை.
சட்டங்கள் எங்கள் நம்பிக்கைகளுக்குப் புறம்பாக இருந்தால் அதை மீற
எங்களுக்கு உரிமை உண்டு'' என்றார்.
பார்ப்பனர் சங்க இதழான "பிராமின்
டுடே''பத்திரிகையில் அதன் தலைவரான நாராயணன், "ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை
நடைமுறைகளின்படி நீண்டகாலம் கலப்பில்லாமல் உருவாகும் மரபணு சார்ந்த
வர்களின் சந்ததியினர்தான் அந்த மரபணுவின் குண நலனை இயல்பாகப்
பெறுகிறார்கள். சில பிராமண இயல்புகள் இம்மாதிரி தொடர் நிகழ்வின்
அடிப்படையில் வலுப்பெறுகின்றன என நம்பத் தயாராகவே உள்ளோம். இந்த ஒரு
விஷயத்திற்காவது கலப்புத் திருமணம் என்னும் விஷப் பரீட்சையிலிருந்து நம்
சமூகம் விலகி இருக்கலாமே''என்று எழுதுகிறார்.
இப்படி பல
இடங்களிலிருந்தும் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதி ராகக் குரல்கள்
ஒலிக்கத் தொடங்கி யிருப்பதற்கு முக்கியமான சில காரணங்கள் இருக்கின்றன.
கல்வி வளர்ச்சி, நகர் மயமாதல், தொடர்பியல் புரட்சி, உலகமயமாதல் என கடந்த
இருபதாண்டுகளில் நடந்த மாற்றங்கள் எல்லோரையும் பொது வெளியில் இணைக்கத்
தொடங்கியது.
எவரும் தங்கள் சாதிப் புனிதங்களைக் காட்டி மற்றவர் களை
அவமதிக்க முடியாதபடி எல்லோருடனும் கலந்து பழகவும் வாழவும் வேண்டிய
நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சமூக நீதிக்கான போராட்டங்கள் கல்வி மற்றும் வேலை
வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்
சேர்ந்தவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கியது.
இந்த மாற்றங்களால்
விளைந்த சமூக, பொருளாதாரப் பலன்களை மட்டும் அனுபவிக்க விரும்பிய பல
இடைநிலை சாதியினர் பண் பாட்டுரீதியாக தங்கள் பழமைவாத கருத்துக்களை
விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. மேலும் சமூகத்தின் எந்த இடத்திலும் தங்கள்
சாதிப் புனிதத்தைக் காப்பாற்ற இயலாத அவர்கள் மண உறவுகளின் வழியாக மட்டுமே
அதைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். பெண்கள் மீதான
ஒடுக்குமுறையின் மூலமே அதை சாதிக்க நினைக்கின்றனர்.
சமூக நீதிக்காக
எழுந்த சாதிய அரசியல் இன்று மிகப்பெரிய பண்பாட்டு ஒடுக்குமுறையின் களமாக
மாறிவிட்டது மிகப்பெரிய அவலம். சாதிய அரசியல் என்பது பிற சாதியினருக்கு
எதிரான கடும் வெறுப்பாக மாறிவிட்டது. சாதித் தூய்மையைப் பாதுகாப்பது என்ற
கோஷத்திற்குப் பின்னே இருப்பது அரசியல் அதிகாரத் திற்கான கோஷம் மட்டுமே.
சாதிய அரசியல் கட்சிகளுக்கு அடிபணிந்து நடக்கும் திராவிட இயக்க கட்சிகள்,
பெரியார் தீவிரமாக முன்வைத்த சாதி எதிர்ப்பு கருத்துக்களைப் படிப்படியாகக்
கைவிட்டு விட்டன.
கலப்பு மணங்களுக்கு எதிரான இந்த மனப்பான்மை சாதிக்
கலவரங்களை மட்டுமல்ல, தெரிந்தும் தெரியாமலும் நடக்கும் ஏராளமான கௌரவக்
கொலைகளை இந்தியா முழுக்க அரங்கேற்றி வருகிறது. தமிழகம் அதிக அளவில் கௌரவக்
கொலைகள் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாகக் கண்டறியப்பட்டுள்ளது. சாதி கடந்து
காதலிக்கும், திருமணம் செய்பவர்களைப் பலவந்தமாகப் பிரிப்பது, அவர்களைக்
கொலை செய்வது என்பது மிகவும் பரவலாக நடந்து வருகிறது.
இலைமறைவு காயாக
நீண்டகாலமாக நடந்து வரும் இந்தக் கொலைகள் இப்போதுதான் கொஞ்சம்கொஞ்சமாக
ஊடகங்கள் வாயிலாக வெளிச்சத்திற்கு வருகின்றன. குறிப்பாக, சாதி கடந்த
காதலுக்காக ஏராளமான பெண்கள் தமிழகத்தில் படு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப்
படுகொலைகளுக்கு சம்பந்தப்பட்ட குடும்பங்கள் மட்டுமல்ல, கலப்பு மணத்திற்கு
எதிராகப் பேசிவரும் சாதிய இயக்கத் தலைவர்களுக்கும் முக்கிய பொறுப்பு உண்டு.
தங்கள்
சொந்தப் பெற்றோரே தங்கள் மகளைக் கொலை செய்வதற்கு அவர்களது சாதி வெறி
மட்டும் காரணம் அல்ல, தங்கள் சொந்த சாதியினரின் அழுத்தம் தாங்கமுடி
யாமலேயே பலர் இந்த முடிவை எடுக்கின்றனர். தமிழகத்தில், 2011-ல் 890 பெண்கள்
கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதில், 40 சதவீதம் காதல் விவகாரம்
தொடர்புடையவை. 2011-ல் 7000 பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இளம்
பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாகப் பதிவாகும் பல சம்பவங்கள் கௌரவக் கொலை
களாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஆழமாக எழுந்துள்ளது. பல பெண்களின்
சந்தேகத்திற்கிடமான சாவுகள் சட்டத்தின் பார்வைக்கே வராமல் மூடி
மறைக்கப்பட்டு விடுகின்றன.
சட்டரீதியாய் வயது வந்த எந்த ஆணும்
பெண்ணும் எந்த சமூகத்தைச் சேர்ந்தவரையும் மணம் செய்துகொண்டு வாழும் உரிமையை
நமது அரசியல் சாசனம் வழங்குகிறது. அவர்களுக்கு முழுப்பாதுகாப்பு அளிப்பது
காவல்துறையின் கடமை. அவர்களைத் தடுப்பவர்களை சட் டத்தின்முன் நிறுத்துவதும்
காவல்துறையின் கடமைதான். சில நேர்மையான காவல்துறை அதிகாரிகள் இதுபோன்ற
வழக்குகளை விசாரிக்கும் போது நியாயம் கிடைக்கிறது.
ஆனால் லஞ்சமும்
சாதிய மனப்பான்மையும் தலைவிரித்தாடும் பெரும்பாலான காவல் நிலையங்கள் கட்டப்
பஞ்சாயத்து செய்யும் இடங்களாக மாறிவிட்டன. செல்வாக்குள்ள பெற்றோர்களின்
விருப்பத்திற்கேற்ப காதலர்கள் பலவந்தமாகப் பிரிக்கப்படுகின்றனர். பின்னர்
சாதி வெறி யர்களால் கடுமையாகத் துன்புறுத்தப்படுகின்றனர். பலர் படுகொலை
செய்யப்படுகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தின் டி.ஐ.ஜி.யான எஸ்.கே.
மாத்தூர், வெளிப்படையாகவே காதல் திருமணம் புரிந்த பெண்ணின் தந்தையிடம்
அப்பெண்ணைக் கௌரவக் கொலை செய்ததை ஆதரித்து பேசிய விவகாரம் வெளிவந்து பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இன்று
சாதிவெறி, கிராமத்திலுள்ள படிப்பறிவற்ற மக்களிடம் மட்டும் நிலவும்
பிரச்சினை அல்ல. செய்தித் தாள்களில் வெளிவரும் திருமண வரி விளம்பரங்கள்,
வீடு வாடகைக்கு விடும் அறிவிப்புகள் எல்லாவற்றிலும் இதைக் காணலாம். கல்வி
நிறுவனங்கள், அதிகார அமைப்புகள், வர்த்தக அமைப்புகள், நவீன தொழில் மையங்கள்
என அனைத்திலும் சாதி சார்ந்த குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் சாதி வெறியூட்டும் பதிவுகள் தொடர்ந்து
எழுதப்படுகின்றன.
இந்த சாதி வெறிக்கு எதிராக எல்லா சாதியிலும் உள்ள
முற்போக்கு சிந்தனையும் ஜன நாயக சிந்தனையும் உள்ள இளைஞர்கள் கிளர்ந் தெழ
வேண்டிய காலம் வந்துவிட்டது. இல் லாவிட்டால் இந்த சாதிய அரக்கன் நாம்
அடைந்த அத்தனை முன்னேற்றங்களையும் தின்று தீர்த்து விடுவான்.
('நக்கீரன்' இதழில் மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ள கட்டுரை)
1 comment:
எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தான் எதோ மிகப் பெரிய சாதி மறுப்பாளராக காட்டிக்கொண்டு இந்த கட்டூரையினை எழுதி இருக்கிறார், இந்த கட்டூரையின் கடைசி வரி " இந்த சாதிய அரக்கன் நாம் அடைந்த அத்தனை முன்னேற்றங்களையும் தின்று தீர்த்து விடுவான்" என்பதாக முடிகிறது. முன்னேற்றம் என்று எதை குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை, உண்ண உணவு இல்லாதவர்கள் தமிழகத்தில் இன்னும் இருப்பது தான் நீங்கள் குறிப்பிடும் முன்னேற்றமா ? ஏழையான ஒரு உயர்சாதியில் பிறந்தவன் அந்த சாதியில் பிறந்த ஒரே காரணத்திற்க்காக எந்த அரசு சலுகையும் கிடைக்காமல் இன்னும் ஏழையாக இருப்பதுதான் நீங்கள் சொல்லும் முன்னேற்றமா ? சாதிதான் வேண்டும் என்று நாங்கள் கொடி பிடிக்கவில்லை, சாதியே இல்லை என்ற நிலை வரும்வரை நாங்கள் சாதியை பற்றி பேசுவதில் எந்த தவறும் இல்லை சாதியை அரக்கன் என்கிறார் உங்களைப் போல சிலர் பயன்பெற வேண்டி திராவிடம் என்ற இல்லாத ஒன்றின் தலைவர்களின் பிதற்றல் இது, சாதி என்பது தமிழ் மொழியின் தொடக்கம் முதல் உள்ளது, ஒரு வாதத்திற்க்காக உங்களின் கருத்தை ஏற்பதாக இருந்தால் சாதியே இல்லை என்றால் சட்டமும், இட ஒதுக்கீடும் எந்த அளவுகோளால் இன்று அளக்கப் படுகிறது ? இந்தியா இன்றும் "மத சார்பற்ற நாடு" மட்டும் தான் "சாதி சார்பற்ற நாடு"என்று சொல்வதில்லை, உங்களுக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கி உள்ள எல்லா உரிமைகளும், எல்லோருக்கும் வேண்டும் என்பதுதான் நாங்கள் சமுதாய அமைப்புகளும் கேட்கிறோம். இவ்வளவு வியாக்கியானம் பேசும் நீங்கள் எந்த சாதி என்பது உங்களுக்கு தெரியாது ? உலகைப் பற்றி எந்த சுய சிந்தனையும் இல்லாமல் அய்ந்து வயதில் பள்ளியில் சேரும் அன்றே நீங்கள் என்ன சாதி என்பதற்க்கான"சாதி சான்றிதழ்" சமர்பிக்க சொல்லும் அரசாங்கம், இன்று நீங்கள் சொல்லும் அதே "திராவிடர்களால்" நடத்தப் படுவது தானே...? சாதிகள் உண்டு என்று ஒவ்வொரு கணமும் எங்களுக்கு நீங்களே சொல்லிதந்து விட்டு இன்று சாதி மறுப்புத் திருமணங்கள் ஒரு கலாச்சார இயக்கமாக பிதற்றுகிறீர்கள், கலப்பு மணம் என்றால் அது ஒரு ஆதிதிராவிட இளைஞன், தேவர், கள்ளர், வன்னியர், முத்தரையர், கொங்கு வேளாளர் பெண்ணை திருமணம் செய்வது மட்டும்தானா ? ஏன் அந்த ஆதி திராவிடருக்கும் கீழே இருக்கும் "அருந்ததிய பெண்ணை" திருமணம் செய்வதும் நீங்கள் சொல்லும் புரட்சிதானே.. ? அவ்வாறு ஏதேனும் திருமணங்கள் நடந்து இருக்கிறதா ? அவ்வாறு நீங்கள்தான் எதேனும் கேள்வி பட்டதுதான் உண்டா ? காதல் திருமணங்கள் நடக்க வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை திட்டமிட்டு பிறசாதியில் திருமணம் செய்வது அவர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிப்பது பணம் கொடுக்க மறுப்பவர்களை சாதியை சொல்லி திட்டினான் என்று வன்கொடுமை சட்டத்தில் கைது செய்வதைதான் வேண்டாம் என்கிறோம். தலித் தலித் என்று கூவும் உங்களுக்கு தெரியுமா ? இன்னும் எத்தனை சாதி மக்கள் எந்த அடிப்படை உரிமையும் இல்லாமல் இருக்கிறார்கள் என்று ? தமிழக மக்கள் தொகையில் ஒரு கோடிக்கும் அதிகமான"முத்தரையர்களின்" சட்டமன்ற பிரதி நிதித்துவம் வெரும் நான்கு, நாடளுமன்றத்தில் பூஜ்யம், மக்கள் தொகை அடிப்படையில் இல்லை, மனிதாபிமான அடிப்படையில் சொல்லுங்கள் இதுதான், இவ்வளவுதான் எங்களுக்கான பிரதி நிதித்துவமா ? இதுதான் நீங்கள் சொல்லும் சமதர்மமா ? இங்கே நான் பிறந்த சாதிக்காக பேசினால் அது சாதி வெறியா ? "இந்த மாற்றங்களால் விளைந்த சமூக, பொருளாதாரப் பலன்களை மட்டும் அனுபவிக்க விரும்பிய பல இடைநிலை சாதியினர் பண்பாட்டுரீதியாக தங்கள் பழமைவாத கருத்துக்களை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை" ஏன் நீங்கள் சொல்லும் சமுக. பொருளாதார பலன்கள் எல்லோருக்கும் கிடைத்துவிட்டதா என்ன ? அப்படியானால் எங்கள் சமூகத்திற்க்கு கிடைத்திருக்கவேண்டியது எவ்வளவு ? ஏன் எங்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை பலன்கூட கிடைக்கவில்லை ? இதை நான் கேட்டால் நான் சாதி வெறியன் அப்படிதானே..? இறுதியாக நீங்கள் சொல்லும் முற்போக்கு சிந்தனையும், ஜன நாயக சிந்தனையும் (!) உள்ள எல்லா சாதி இளைஞர்களும் தங்களின் உரிமைக்காக போராட வேண்டும் என்றே நாமும் வேண்டுகிறோம்.
- சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,
ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
Post a Comment